மேச்சேரியில் சாயப்பட்டறைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு. அனுமதி இன்றி கள்ளத்தனமாக செயல்படும் சாயப்பட்டறைகளை இடிக்க முடிவு?
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. நங்கவள்ளி இளம்பிள்ளை,சிந்தாமணியூர், உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பட்டு நூல்களுக்கு அதிக அளவில் சாயம் நனைக்கப்பட்டு வருகிறது. ரசாயனம் கலந்த சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கழிவு நீர் கால்வாய்கள் மூலம் மேய்ச்சல் ஏரி, எர குண்டப்பட்ட ஏரிகளில் விடப்படுகிறது. இதனால் ஏரிகளின் நீர் மாசடைவதோடு ஆழ்துளை கிணறு மற்றும் பாசன கிணறுகளின் நீரும் மாசடைந்து போனது. இதுகுறித்து சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார் சென்றதையடுத்து கடந்த மாதம் 20 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் தொடர்ந்து அதே வீடுகளில் சாயப்பட்டறைகள் மீண்டும் இயங்கி வந்தன. இவை மட்டுமல்லாமல் எரகுண்டபட்டி, சாம்ராஜ் பேட்டை பகுதிகளில் பெரிய பெரிய சாயப்பட்டறைகள் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
சாயப்பட்டறைகளால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வந்தது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் சாயப்பட்டறைகளுக்கு வீடுகளுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சட்ட விரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகளுக்கு, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாயப்பட்டறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாக மீண்டும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் புகார் செய்தனர்.
இதனை அடுத்து புதன்கிழமை சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செல்வகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சாயப்பட்டறைகள் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டதால் உடனடியாக பட்டறைகளை அப்புறப்படுத்த பட்டறை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும் செய்தி பரவவே ஏராளமான சாயப்பட்டறைகள் பூட்டப்பட்டு அதன் உரிமையாளர்களும் பணியாளர்களும் தலைமறைவானார்கள். மேச்சேரியில் குடிசைத் தொழில் போல இயங்கி வரும் சாயப்பட்டறைகளை தடுத்து நிறுத்தாவிட்டால் நிலத்தடி நீரும் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாத நிலை உருவாகும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் சட்ட விரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகள் தொடர்ந்து இயங்கி வருவதால் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து சாயப்பட்டறைகள் இயங்கும் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.