ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் அசிசியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றில் 14 மீனவர்கள் கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுக பகுதியில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே பாம்பனில் இருந்து மீன் பிடிக்க சென்ற இந்த ஆழ்கடல் மீன்பிடி படகு என்ஜின் பழுதாகி சரி செய்ய முடியாமல் படகுடன் 14 மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக படகின் உரிமையாளர் ராமநாதபுரம் மீன்துறை இணை இயக்குனருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 18-ந் தேதி கொச்சின் துறைமுகத்திலிருந்து எனக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் ஆந்திரா, காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த படகானது கொச்சின் துறைமுகத்திலிருந்து சுமார் 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்று, அதை சரி செய்ய முடியாமல் மீனவர்கள் படகில் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து வருகின்றனர். இவர்களை தமிழக அரசும்  நமது இந்திய கடற்படையும் சேர்ந்து மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து இருகின்றனர்.