சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை விற்பனைக்காக அடுப்பு மூலம் தயாரிக்கும் பொரி உற்பத்தி தீவிரம்:
கடந்த ஆண்டை விட விலை உயர்வு
வருகின்ற 4 ந்தேதி ஆயுத பூஜையும், 5ம் தேதி சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பொரி உற்பத்தி நிலையங்களில் அடுப்பு பொரிக்கான ஆர்டர் குவியத் தொடங்கி உள்ளது.
இதில், தர்மபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மெஷின் மூலமே பொரி தயாரிக்கப்படுகிறது.
ஆனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, ஓமலூர் ஆகிய இடங்களில் அடுப்பு மூலம் பழையான முறையில் பொரி இப்போதும் தயாரிக்கப்படுகிறது.
இப்படி தயாரிக்கும் பொரிக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் பொரி தயாரிப்புக்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து 64 குவிண்டால் அரிசி நெல்லை வரவழைத்து அதை மிதமான முறையில், வேக வைத்து உப்பு நீர் தெளித்து பக்குவமடைந்த பின்பு 7 நாட்கள் கழித்து பொரியை தயார் செய்கின்றனர்.
ஆனால் தற்போது பொதுமக்கள் மத்தியில் மெஷின் பொரிக்கு வரவேற்பு குறைந்து, அடுப்பு மூலம் தயாரிக்கப்படும் பொரியை விரும்பி சாப்பிடுகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் அடுப்பு மூலம் தயாரிக்கப்படும் பொரியை விரும்பி கேட்பதால் வியாபாரிகள் அடுப்பு பொரிக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு அரிசி நெல்லின் விலை 75 கிலோ மூட்டை 1700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால் பொரி விலை சற்று உயர்ந்து உள்ளது.
கடந்தாண்டு பொரி மூட்டை ரூபாய் 500க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொரி மூட்டை ரூபாய் 800 விற்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் பொரி விலை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து ஓமலூர் பொரி மண்டி உரிமையாளர் மலர் கூறியதாவது,
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பொறி அதிகளவு வியாபாரமாக இல்லை .ஆனால் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளது .
பொரி அரிசி விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஒரு மூட்டை பொறி ரூபாய் 500க்கு விற்றோம். இந்த ஆண்டு ரூபாய் 700 முதல் 800 வரை விற்கிறோம்.
மிஷின் தயாராகும் பொறிக்கும் கையில் தயார் செய்யப்படும் இந்த பொரிக்கும் ருசி வித்தியாசம் இருக்கும்.
நாங்கள் தயாரிக்கும் இந்த பொரியை அதிக நாள் வைத்து சாப்பிடலாம், மிஷினில் தயாரிக்கப்படும் பொரி அதிக நாட்கள் வராது.
இவ்வாறு பொரி மண்டி உரிமையாளர் மலர் தெரிவித்தார்.