பொதுவாக அழகுக்கு பின்னால் ஆபத்து இருக்கும் என்பார்கள். அந்த நிலைமை தான் பாம்பன் ரோடு பாலமும். பகலில் பாம்பன் ரோடு பாலத்தை பார்த்தால் அது மிகவும் அழகாக இருக்கும். இருபுறமும் கடல். அதன் மேல் நீண்ட தூரம் சாலை மேம்பாலம். கடலுக்கு இடையே ரெயில்வே மேம்பாலம். ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலை மேம்பாலத்தில் நின்று தான் பாம்பன் கடல் அழகை ரசிப்பார்கள். கடலுக்கு நடுவில் ஊர்ந்து வரும் ரயிலின் அழகையும், பாலத்தை கடந்து செல்லும் கப்பலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பாம்பன் ரோடு பாலத்தின் மீது நின்று தான் பார்த்து ரசிப்பார்கள். ராமேசுவரம் என்றாலே பாம்பன் ரோடு மேம்பாலம் ஒரு தனி இடம் பிடித்து விட்டதே என்று சொல்லலாம். இது பகலில் பார்ப்பதற்கு அழகாக காட்சி தருகிறது. அதே நேரத்தில். இரவில் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான பாலமாக விளங்குகிறது. அதுக்கு காரணம் பாம்பன் ரோடு பாலத்தின் இருபுறமும் உள்ள நுழைவு பகுதியில் இருக்கும் மின்விளக்குகள் எரியாதது தான். இதனால் பாம்பன் ரோடு மேம்பாலமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வழக்கமாக இரவு நேரத்தில் ராமேசுவரத்துக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு பாம்பன் ரோடு மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பது தெரியும். ஆனால் புதிதாக ராமேசுவரத்துக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாம்பன் ரோடு மேம்பாலத்தின் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பது ெதரிவதில்லை. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேகமாக வரும் கார், ஜீப், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளுக்கு பாம்பன் ரோடு மேம்பாலத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக அதை கடக்கும் போது அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். பாம்பன் ரோடு மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அவை எரியாததால் பாம்பன் மேம்பாலமே இருள்மயமாக காட்சியளிக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ராமேசுவரம் ஒரு புண்ணிய தலம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பாம்பன் ரோடு பாலத்தில் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து இருப்பதாலும் நுழைவு பகுதியில் வேகத்தடை இருப்பதாலும் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து ெகாண்டு கடலுக்குள் பாய்ந்து விடும் அபாயம் உள்ளது. ஏனெனில் இரவு நேரங்களில் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பாலம் கடலுக்கு மேல் கட்டப்பட்டு இருப்பது மின்விளக்கு எரியாததால் தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் இந்த பாலத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் எரிய வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்