ராமேசுவரம் துறைமுகம் கடற்கரை பகுதியில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட வனக்காவல் நிலைய வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனக்காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மீன்பிடி படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது அந்த படகில் வந்த நபர்கள் படகை கரை யோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்திவிட்டு வேகமாக தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து வன காவல் நிலைய அதிகாரிகள் அந்த படகில் ஏறி சோதனை செய்தபோது 7 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 87 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் உயிருடன் இருந்ததால் மீண்டும் வனத்துறையினர் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விட்டனர். பிடிபட்ட படகு ராமேசுவரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகனை வனக்காவல் நிலைய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
ரூபன் செய்தியாளர்- ராமநாதபுரம் மாவட்டம்