மேட்டூர், அக். 13. மேட்டூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை.
கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேட்டூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள செட்டிபட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (56) மேட்டூர் ஏலி கேரட்டில் உள்ள அரசு கல் குவாரியில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மகன் நந்தகுமார் (24) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.
கடந்த 2018-ம்ஆண்டு தகராறு முற்றியது மயில்சாமியை நந்தகுமார், அவரது தந்தை மகாதேவன், தாயார் அலமேலு, சகோதரி முத்துலட்சுமி ஆகியோர் கட்டையாலும் கல்லாலும் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த மயில்சாமி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் நந்தகுமார், மகாதேவன், அலமேலு மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று இவ்வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார்சரவணன் நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ 12,500அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மகா தேவனுக்கு ரூ 1,500ம், அலமேலு மற்றும் முத்துலட்சுமிக்கு தலா ரூ.2,500ம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்ற நந்தகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜசேகரன் செய்தியாளர் தலைமை செய்தி பொறுப்பாளர்.