சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

இப்பள்ளியில் 286 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சிவகுமார் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

தலைமை ஆசிரியர் இடமாறுதலை ரத்து செய்ய கோரி கடந்த இரண்டு வாரங்களாக பெற்றோர்களும் மாணவ மாணவியரும் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட அளவிலான கல்வித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் போலீஸ் வீடு வீடாக சென்று குழந்தைகளை அழைத்தது 23 பேர் மட்டுமே பள்ளிக்கு வந்தனர்.

நேற்று மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் பெற்றோர்களுடனும் கிராம மக்களுடனும் பேச்சு நடத்தி சமாதானப் படுத்தினார். மாறுதல் செய்யப்பட்ட தலைமையாசிரியர் நான்கு மாதங்களுக்குப் பிறகு இதே பள்ளியில் பணியாற்றுவார் என்று உறுதி அளித்தார். எம்எல்ஏவின் சமாதானத்தையடுத்து இன்று காலை பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள்.