காமராஜர் திராவிட மாடல் தான் தமிழகத்திற்கு தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நிலைப்பாடு என்பதே திமுகவின் திராவிட மாடல் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கண்டனம் தெரிவித்து இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், மின் கட்டண உயர்வுக்கு சாதாரண ஏழை எளிய மக்களா காரணம்? என்று கேள்வி எழுப்பினார். ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நிலக்கரி மற்றும் தளவாட பொருட்கள் வாங்குவதில் ஊழல் ஆகியவற்றைத் தவிர்த்து இருந்தால் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்று கூறிய அவர் ஏற்கனவே கொரோனா பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது மீண்டு வரும் மக்களுக்கு திமுக மேலும் சுமையை அதிகரிக்கும் விதமாக சொத்து வரி மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியாக ஆன பிறகு ஒரு நிலைப்பாடு என்பதே திமுகவின் திராவிட மாடல் என்று விமர்சித்த ஜி கே வாசன், காமராஜர் திராவிட மாடல்தான் தற்பொழுது தமிழகத்திற்கு தேவை என்றார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை ஏமாளிகளாக்கிவிட்டதாகவும் கூறிய ஜி.கே.வாசன், திமுகவின் எந்த நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளாக மாறும் என்றும் தெரிவித்தார்.