மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு இணைப்பு
புதியதாக போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உருவாக்கம்.
வடக்கு, மேற்கு மண்டலத்திற்கு சேலம் தலைமையிடம்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும்,
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவையும் இணைத்து மேம்படுத்தி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல்துறையில் அமலாக்கப் பிரிவில்,
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையில் செயல்பட்டு வந்தது.
இதன் கீழ் சென்னை மற்றும் மாவட்டங்களில் மத்திய நுண்ணறிவு பிரிவு (சி.ஐ.யு.) செயல்பட்டு வந்தது.
அதேபோல தமிழக காவல்துறையின் குற்றப் பிரிவில்,போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு செயல்பட்டு வந்தது.
இந்தப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்தப் பிரிவு மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என 15 இடங்களில் செயல்பட்டு வந்தது.
இத்துடன் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவும், குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டையும், புழக்கத்தையும் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவுடன் (என்.ஐ.பி.) இணைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்பேரில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும்,போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவையும் இணைத்து மேம்படுத்தி போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாகப் பிரிவாக மறுசீரமைக்கப்படும்.
இதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.
இதனிடையே புதியாக சீரமைக்கப்பட்ட போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி தலைமையின் கீழ் செயல்படும்.
மேலும் ஒரு ஐ.ஜி. மற்றும் ஐந்து எஸ்.பி.க்களை கொண்டு செயல்படும்.
சென்னை-1, சென்னை-2 (சென்னை நகரம், ஆவடி, தாம்பரம்),
சேலம்-3 (வடக்கு மற்றும் மேற்கு மண்டலம். கோவை, திருப்பூர் மற்றும் சேலம் நகரங்கள்), மதுரை-4 (தெற்கு மற்றும் மத்திய மண்டலம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி நகரங்கள்), சென்னை-5 (அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு, மாநிலம் முழுவதும் செயல்படும் வகையில் எஸ்.பி.க்கள் நியமிக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.