இரண்டு லட்சம் ரூபாய் கடனுக்கு அஞ்சு லட்ச ரூபாய் வசூலித்த காவலர்.பாக்கி கடனுக்கு குழந்தையை விற்று தருமாறு மிரட்டியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தனபால் தனது குடும்பத்துடன் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு அருகே வசித்து வந்த அஞ்சலா என்பவரின் மூலம் அஞ்சலாவின் மருமகனான துளசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் தங்கதுரை மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோரிடம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் என பத்து மாதம் தவணையில் செலுத்தி முடிக்கும் படியான முறையில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர் .கடன் தொகை கொடுக்கும் போது 20 ஆயிரம் ரூபாய் பிடிக்கும் செய்து கொண்டு கொடுத்ததாகவும் அதன் பிறகு மாதம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும், 8 மாதம் செலுத்திய நிலையில் இதுவரை செலுத்தியது வட்டி மட்டும் தான் அசல் 2 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது அதற்கு வட்டி சேர்த்து 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் கஞ்சா வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் அந்த தொகையும் தனபால் நகைகளை விற்று செலுத்தி உள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் தனபால் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு சென்றுவிட்டார். கடந்த மாதம் உறவினர் ஒருவரின் இறப்புக்கு வந்த தனபால் குடும்பத்தினரிடம் காவலர் தங்கதுரை, அவரது மனைவி உமாமகேஸ்வரி, மைத்துனர் சங்கர், மாமியார் அஞ்சலா ஆகியோர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுவரை கொடுத்தது அனைத்தும் வட்டிக்கான தொகை என்றும், அசல் மற்றும் அதற்கு மீட்டர் வட்டி உடன் சேர்த்து 8 லட்சம் தரவேண்டும் என்றும், அஞ்சலா அடகு வைத்த ஒன்னரை பவுன் நகையை மீட்டுத் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து தங்களை மீட்டு உதவவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.