சித்தர் கோயிலின் வளர்ப்பு கன்று குட்டி கிணற்றில் விழுந்து பலி.

சேலம் மாவட்டம், கஞ்சமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசுமாடு மற்றும் சிந்து மாடு கன்று குட்டிகளை விட்டுச் செல்கின்றனர் . தற்போது பத்துக்கு மேற்பட்ட கன்று குட்டிகள் இங்கு வளர்ந்து வருகிறது. இந்த கன்று குட்டிகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு பராமரிப்பும் செய்யப்படுவதில்லை என பக்தர்கள் பலமுறை குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு வருட கன்று குட்டி சாலை விபத்தில் அடிபட்டு இறந்தது . இதனைத் தொடர்ந்து ஒன்றரை வயது உள்ள கன்று குட்டி சித்தர் கோவில் அருகே 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்து இறந்தது.இந்த கன்றுக்குட்டி சேலம் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், இங்கு சாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் கன்று குட்டிகளை கோசாலை அமைத்து பாதுகாக்கப்பட வேண்டுமென பலமுறை தெரிவித்தும் கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாததால் அடிக்கடி கன்று குட்டிகள் இறந்து வருகின்றது  என்றும், கன்று குட்டிகளுக்கு பக்தர்கள் கோசாலை அமைத்து கொடுக்க முன்வந்தும், இதனை மறுத்து வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சித்தர் கோயில் நிர்வாகத்தை நேரில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர்.