சேலத்தில் எண்ணும், எழுத்தும் திட்டம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி.
இளம்பிள்ளை
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் இப்பயிற்சியை சென்னை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் (பயிற்சி ) குமார், ஓமலூர் பத்மவாணி கலை அறிவியல் கல்லூரியில் துவக்கி வைத்து பேசுகையில், இரண்டாம் பருவத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தி, இரண்டாம் பருவத்தில் அரும்பு ,மொட்டு மற்றும் மலர் பயிற்சிகள் வண்ணங்களை வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன என்றும் குழந்தைகள் அடைய வேண்டிய கற்றல் விளைவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், கேட்டல், பேசுதல் திறன்களோடு கூடுதலாக எழுதுதல் திறனுக்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், செய்தித்தாளை துணைக் கருவியாக பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள், துணைக் கருவிகளாக பயன்படுத்துவதற்குரிய படங்கள் மற்றும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் செயல்பாடுகளுக்கு புதிதாக சின்னங்கள் இரண்டாம் பருவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இப் பயிற்சியானது சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சந்தோஷ், பத்மாவதி கல்வி நிறுவனம் தாளாளர் சத்தியமூர்த்தி, பத்மவாணி கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், பத்மவாணி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் ஓமலூர் ஒன்றியத்தைச் சார்ந்த 315 ஆரம்ப பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உத்தம சோழபுரத்தில் உள்ள சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் கலந்து கொண்டு கூறுகையில், சேலம் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சியானது முழுவதும் குழு செயல்பாடுகள் மூலம் 4796 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் சுமார் 752 மாவட்டக் கருத்தாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு ஒன்றிய அளவில் 21 மையங்களில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செல்வராஜ் செய்தியாளர் இளம்பிள்ளை.