சங்ககிரியை அடுத்துள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற இச்சம்பவம் குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட சூரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வெள்ளூற்று பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சௌந்திரராஜ பெருமாள் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் சனிக்கிழமை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இக்கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருந்த போதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தேவூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்வது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி செய்தியாளர் முத்து.