சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரில் உள்ளது அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 670 மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியின் துப்புரவு பணிக்கு இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. மாணவியர் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. துர்நாற்றம் வகுப்பறை வரை வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூய்மை செய்யப்படாத கழிவறையில் மாணவியர் செல்ல முடியாமல் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை தலைமை ஆசிரியரிடமும் கல்வித் துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.