கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு 3 ஆண்டுகள்  சிறைத்தண்டனை, சங்ககிரி சப்கோர்ட் தீர்ப்பு.


சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை திரும்ப வழங்காத பிரச்சனையில், நிலத்தின் உரிமையாளரை கொலை செய்ய முயன்ற வழக்கில், 6 பேருக்கு 3 ஆண்டு

சிறைத்தண்டனையும், 2 பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் மற்றும் அபராதம் விதித்து சங்ககிரி சப் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள புதுப்பட்டி, தோட்டக்காடு, வெள்ளரிவெள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் செங்கோட்டையன் (27). இவர், அதே பகுதியை சேர்ந்த தங்கரத்தினம்(41) என்பவரது 77 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். குத்தகை காலம் முடிந்ததும், தங்கரத்தினம் நிலத்தை திருப்பி கேட்டபோது செங்கோட்டையன் நிலத்தை திருப்பி தராமல் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும்  தகராறு ஏற்பட்டு கடந்த 2014 ஆண்டு அக்டோபர் 30 - ம் தேதி தங்கரத்தினம் (41) , சின்ன பிள்ளை (56), கந்தாயி (37), சிவகாமி (43), சித்தையன் (45), சண்முகம் (63), குமார் (33), சாந்தா (43) ஆகியோர் ஒன்று சேர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரது தந்தை சுப்பிரமணியத்தை அரிவாள் மற்றும் தடியால் தாக்கி காயப்படுத்தினர். இது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து  8 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சங்ககிரி சப் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி 19-ம் தேதி அன்று தீர்ப்பு வழங்கினார். அதில் கந்தாயி, சிவகாமி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 அபதாரமும்,மற்றும் சித்தையன், சண்முகம் ஆகியோருக்கு  தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்      ரூ. 1500 அபராதமும், குமார் மற்றும் சாந்தா ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 500 அபதாரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.