ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 772 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி வளாகத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னிலையில் ஊராட்சி துணை தலைவர் புரோஸ் கான், வார்டு உறுப்பினர்கள் முகம்மது மீராசா, அய்யூப்கான், பீர் மைதீன் உள்பட பலர் கூடுதல் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், இந்த அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருப்பதால் மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தோம். இது சம்பந்தமாக தொடர்ந்து குரல் எழுப்பி மாணவிகள் கோரிக்கை நிறைவேற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

ரூபன் செய்தியாளர் -ராமநாதபுரம் மாவட்டம்