மகுடஞ்சாவடி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்செல்வன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்கலான கண்டர்குலமாணிக்கம், ஏகாபுரம் கிராம விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒரு எக்டர் சோளம் சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி, கறவை மாடு, ஆடுகள், மண்புழு உரத்தொட்டி, தேனிப்பெட்டி, தீவணப்புல் வளர்க்க நிதி உதவி என ஒரு எக்டருக்கு மொத்தம் ரூ.50000/- பின்னேற்பு மானியம் மற்றும் இடுபொருட்களாக இணைந்து வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலவுடமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதார் எண், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இதில் இணைய விரும்பும் விவசாயிகள் ஒரு எக்டர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்திட வேண்டும். அத்துடன் சோளம் பயிருக்குள் ஊடுபயிர் சாகுபடி செய்திட வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே ஆடு, மாடுகள் வைத்திருப்பவராக இருக்கக்கூடாது. தீவணப்புல் சாகுபடிக்காக 10 சென்ட் இடம் ஒதுக்கிட வேண்டும். திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அரசு பணியாளர்களாகவோ, இதற்கு முன் இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளாகவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகவோ இருக்கக் கூடாது. ஆதிதிராவிட விவசாயிகள் பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.