மேட்டூர் லக்கம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம்.கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் லக்கம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் தலைமை வகித்தார். கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மேட்டூர் சிறப்பு வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் நதியா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வேளாண்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்றனர்.
அந்தந்த துறைகளில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய நல திட்டங்கள் பற்றியும் அவற்றிற்கான தகுதிகள் பற்றியும் துறை அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள். பின்னர் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங்கிடம் வழங்கினார்கள். மனுக்களை ஆய்வு செய்த ஆட்சியர் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.