மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55,000கன அடியாக அதிகரிப்பு.  கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,000 கன அடியாக அதிகரித்தது.   இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,000கன அடியாக நீடித்து வருகிறது.  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 55,000கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 32,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.  மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.   மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.