மேட்டூர், செப். 15. பண்ணவாடி பரிசல் துறை மூடல்... பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அவதி.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் நாகமரை பரிசல் துறைக்கு காவிரியை கடக்க படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பரிசல் துறை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விடப்படும். கடந்த முறை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் பரிசல் துறை ஏலம் விடப்பட்டது. குத்தகை காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் நடப்பு ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஏலம் விடப்பட வேண்டும். குத்தகை காலம் முடிந்தும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பொது ஏலம் விடவில்லை.குத்தகை காலம் முடிவடைந்ததால் பரிசல் துறை மூடப்படுவதாகவும் யாரும் காவிரியில் பரிசல் இயக்கக் கூடாது என்றும் மீறி இயக்குவோர் மீது போலீஸ் நடவடிக்கை பாயும் என்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

முன் அறிவிப்பு ஏதும் இன்றியும் மாற்று ஏற்பாடுகள் செய்யாமலும் திடீரென இன்று படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியரும் அலுவலகம் செல்வோரும் சந்தைக்கு விளைபொருட்களைகொண்டு செல்லும் விவசாயிகளும் வியாபாரிகளும் பரிசல்துறைக்கு வந்து பரிசல் இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.