கொண்டலாம்பட்டி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். இரண்டு வாலிபர்கள் கைது. உணவு தடுப்பு போலீசார் அதிரடி.


சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அடுத்த உத்தமசோழபுரம், சமத்துவபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தன. இதனையடுத்து எஸ் ஐ பெரியசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தமசோழபுரம், சமத்துவபுரம் பகுதியில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் மூட்டையுடன் வந்தனர். இவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் ஆட்டையாம்பட்டி மூவேந்தர் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் (25), ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய இரண்டு பேர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளிமாநிலத்தில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய வாகனம், விற்பனைக்கு கொண்டு சென்ற ஒரு டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவையை பறிமுதல் செய்து, சரவணன், மணிகண்டன் ஆகியோரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி மேட்டூர் சதுரங்காடியில் இன்று காலை 11. 00 மணிக்கு தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ். செம்மலை கண்டன உறையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மணி (ஒமலூர்), ராஜமுத்து (வீரபாண்டி), ஜெய்சங்கரன் (ஆத்தூர்), சுந்தர்ராஜன் (சங்ககிரி) ,சித்ரா (ஏற்காடு), நல்லதம்பி (கெங்கவல்லி),ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ,மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ,கிளை கழக நிர்வாகிகள் , பொதுமக்கள், சிறுகுறு வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக சரிவு.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 30,000 கன அடியாக சரிந்தது.

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலவாய்ப்பட்டி ஊராட்சியில் இரண்டு கான்கிரீட் சாலைகள் அமைக்க ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடும் பணியை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு என்கிற மருதமுத்து துவக்கி வைத்தார் இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு பேரணி.


சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி சார்பில் மாதத்தில் இரண்டு சனிக்கிழமை அன்று தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பணி மற்றும் உறுதிமொழி ஏற்பு , சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நகராட்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கே. வி. பி. தியேட்டர் ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு, காக்காபாளையம் மெயின் ரோடு, பழக்காரன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பேரணி நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரங்களின் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற குறிக்கோளுடன் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி, உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பையை எவ்வாறு பிரித்து எடுத்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் நகராட்சி ஆணையாளர் (பொ) முஸ்தபா, 23 - வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதிபூபதி மற்றும் கவுன்சிலர்கள் சிவகுமார், நாகராஜ், விஜயலட்சுமிகுமார், சித்ராசதாசிவம், சுகாதார ஆய்வாளர் நிருபன்சக்கரவர்த்தி, பரப்புரை மேற்பார்வையாளர் கலைவாணி, பரப்புரையாளர்கள் மீனா, சங்கீதா, சந்தியா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில், இப்பகுதியில் விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழிலில் பயன்படுத்தப்படும் ஜரிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஜவுளி உற்பத்தியாளர்களும், கடை உரிமையாளர்களும் தனித்தனியாக பிரித்து எடுத்து, அதனை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.